10 ஆண்டு சோகத்துக்கு முடிவு கட்டுமா இந்திய கிரிக்கெட் அணி? அஸ்வின் ரவிச்சந்திரன் பதில்
10 ஆண்டுகளாக இந்தியா ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்ல முடியாமல் இந்தியா தவித்து வரும் நிலையில், இந்த ஆண்டு நடக்கும் ஒருநாள் உலகக்கோப்பை அதை முடிவுக்கு கொண்டு வரும் என அஸ்வின் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 2013இல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை எம்எஸ் தோனி தலைமையில் வென்றது. அதன்பிறகு 2014 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இலங்கையிடம் தோல்வி, 2015 ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி, 2016 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் வெஸ்ட் இண்டீசிடம் தோல்வி, 2017 சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி என தொடர்ந்து நாக் அவுட் போட்டிகளில் சொதப்பி வருகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தொடர் தோல்வி
2019 ஒருநாள் உலகக்கோப்பையின் அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்த இந்தியா, 2021 டி20 உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை. பின்னர் 2022 டி20 உலகக்கோப்பையில் அரையிறுதி வரை சென்று இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவியது. இதற்கிடையே 2021 மற்றும் 2023 இல் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளுக்கு தொடர்ந்து தகுதி பெற்றாலும், அங்கும் வெற்றி பெற தவறிவிட்டது. இந்நிலையில் இந்திய அணியின் மூத்த ஆல்ரவுண்டர் அஸ்வின் ரவிச்சந்திரன் தனது யூடியூப் சேனலில் இது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், "இந்தியா ஒரு வலுவான அணி. ஒரு சில காரணிகளைத் தவிர, இந்த முறை இந்தியாவுக்கு சிறந்த வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு இந்திய அணிக்கு பேவரிட்டாக இருக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.