பேட்மிண்டன் தரவரிசையில் 10 ஆண்டுகளில் இல்லாத சரிவை சந்தித்த பிவி சிந்து
தொடர்ந்து சீரற்ற ஃபார்மில் இருந்து வரும் இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, செவ்வாயன்று (ஜூலை 18) வெளியிடப்பட்ட உலக பேட்மிண்டன் தரவரிசையில், ஐந்து இடங்கள் சரிந்து 17வது இடத்திற்கு தள்ளப்பட்டார். முன்னதாக, 2022 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின்போது பிவி சிந்துவிற்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் ஐந்து மாத காலம் காயத்திற்கு சிகிச்சை எடுத்து மீண்டு வந்துள்ள பிவி சிந்து, வெற்றிக்காக தொடர்ந்து போராடி வருகிறார். எனினும், இந்த சீசனில் ஒரு பட்டத்தைக் கூட வெல்ல முடியவில்லை. இந்நிலையில், தற்போது 17வது இடத்திற்கு தள்ளப்பட்டு மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளார். இது கடந்த 10 ஆண்டுகளில் அவரது குறைந்த தரவரிசையாகும். கடைசியாக 2013 ஜனவரியில் 17வது இடத்தைப் பிடித்தார்.
இரட்டையர் பிரிவில் மூன்றாவது இடத்தில் சாத்விக்-சிராஜ் ஜோடி
ஆடவர் இரட்டையர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி, உலகின் 3வது இடத்தில் உள்ள இந்தியாவின் சிறந்த பேட்மிண்டன் வீரர்களாக திகழ்கின்றனர். பிரணாய் எச்.எஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 10வது இடத்தில் உள்ளார். மேலும் லக்ஷ்யா சென் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் முறையே 12 மற்றும் 20வது இடங்களைப் பிடித்தனர். மகளிர் பிரிவில் சாய்னா நேவால் 5 இடங்கள் சரிந்து 36வது இடத்தில் உள்ளார். ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் இருவரும் மகளிர் இரட்டையர் பிரிவில் ஒரு இடம் பின்தங்கி 19வது இடத்தைப் பிடித்தனர். அதே நேரத்தில் கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் 25 இடங்களுக்குள் இந்தியர் யாரும் இல்லை.