ஜப்பான் ஓபனிலும் தோல்வி; தொடர் தோல்விகளால் தத்தளிக்கும் பிவி சிந்து
டோக்கியோவில் நடந்து வரும் ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்திய வீராங்கனை பிவி சிந்து முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவி வெளியேறினார். 32 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த போட்டியில் சீன தைபேயின் பை யூ போவிடம் 12-21, 13-21 என்ற நேர் செட் கணக்கில் சிந்து தோல்வியடைந்தார். முன்னதாக, கடந்த வாரம் நடந்த கொரியா ஓபன் தொடக்க ஆட்டத்திலும், இதே சீன தைபேயின் பை யூ போவிடம் எளிதாக நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், இந்த ஆண்டு நடந்த 13 BWF உலக பேட்மிண்டன் தொடர்களில் ஏழாவது முறையாக முதல் சுற்றில் தோல்வியடைந்துள்ளார்.
பயிற்சியாளரை மாற்றிய பிவி சிந்து
முன்னாள் உலக சாம்பியன், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் உள்ளிட்ட பல சாதனைகளை படைத்துள்ள பிவி சிந்து, தனது காயத்திற்கு சிகிச்சை பெற்று திரும்பிய பிறகு, தொடர்ந்து பல தொடர்களில் முதல் சுற்றில் தோல்வியடைந்து வருகிறார். இதன் மூலம் உலக தரவரிசையில் 17வது இடத்திற்கு பின்தங்கினார். இதையடுத்து, பிவி சிந்து, 2003 ஆம் ஆண்டு ஆல்-இங்கிலாந்து சாம்பியனான, முகமது ஹபீஸ் ஹாஷிமை தனது புதிய பயிற்சியாளராக நியமித்துள்ளார். இதற்கிடையே, சிந்து ஒருபுறம் போராடி வரும் நிலையில், சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி ஜப்பான் ஓபனில் இந்தோனேசியாவின் லியோ ரோலி கார்னாண்டோ மற்றும் டேனியல் மார்ட்டின் ஜோடியை 21-16 11-21 21-13 என்ற கணக்கில் வீழ்த்தினர்.