CT 2025: பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்ய திட்டம் எனத் தகவல்
செய்தி முன்னோட்டம்
வங்கதேசத்தை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்திய பிறகு, ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது குரூப் பி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.
தொடக்க ஆட்டத்தில் ஷுப்மன் கில் அடித்த சதம், முகமது ஷமியின் பந்துவீச்சு இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது.
இது, ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு என நல்ல சமநிலையுடன் இருப்பதாகத் தெரிகிறது.
இருப்பினும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அமைப்பைப் பொறுத்து பந்துவீச்சு வரிசையில் மாற்றம் செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேட்டிங் வரிசை
இந்திய அணியின் பேட்டிங் வரிசை
வங்கதேசத்திற்கு எதிராக 69 ரன்கள் எடுத்த வலுவான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஜோடியான ரோஹித் ஷர்மா மற்றும் ஷுப்மான் கில் இதிலும் ஓபனர்களாக களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விராட் கோலி சமீபத்தில் ஃபார்மில் சரிவு ஏற்பட்ட போதிலும் தனது நம்பர் 3 இடத்தைத் தக்க வைத்துக் கொள்வார் எனத் தெரிகிறது.
பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர்களுக்குத் தயாராக கூடுதல் மணிநேரம் அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் தொடர்ந்து 4 மற்றும் 5 இடங்களில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சு
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் மற்றும் பந்துவீச்சு வரிசை
இந்தியாவின் ஆல்ரவுண்டர்களான அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
சுழற்பந்து வீச்சாளர்களில், முந்தைய ஆட்டத்தில் குல்தீப் யாதவ் இடம்பெற்றார்.
ஆனால் பாகிஸ்தானின் பேட்டிங் பலத்தை எதிர்கொள்ள வருண் சக்ரவர்த்தி அவருக்கு பதிலாக களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேகப்பந்து வீச்சைச் பொறுத்தவரை முந்தைய போட்டியில் விளையாடிய முகமது ஷமி மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரே இதிலும் இடம்பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.
பிளேயிங் லெவன்
இந்தியாவின் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்
சாம்பியன்ஸ் டிராபியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டிக்கான எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன் பின்வருமாறு:-
ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ்/வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, ஹர்ஷித் ராணா.
பாகிஸ்தான் அணி முந்தைய போட்டியில் தோல்வி அடைந்துள்ள நிலையில், இதில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதேநேரம், இந்திய அணி இதில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை வலுப்படுத்தும் முனைப்புடன் உள்ளது.