Loading...
இந்திய கால்பந்து மிகவும் சவாலான காலகட்டத்தை நோக்கி செல்கிறது: முன்னாள் தலைவர் பிரபுல் படேல் எச்சரிக்கை
இந்திய கால்பந்து மிகவும் சவாலான காலகட்டத்தை நோக்கி செல்வதாக பிரஃபுல் படேல் எச்சரித்துள்ளார்.

இந்திய கால்பந்து மிகவும் சவாலான காலகட்டத்தை நோக்கி செல்கிறது: முன்னாள் தலைவர் பிரபுல் படேல் எச்சரிக்கை

எழுதியவர் Vasuki
Nov 21, 2026
03:32 pm

செய்தி முன்னோட்டம்

அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (AIFF) தலைவர் தேர்தல் வரும் டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்திய கால்பந்து மிக இக்கட்டான காலகட்டத்தை நோக்கிச் செல்வதாக முன்னாள் தலைவர் பிரபுல் படேல் எச்சரித்துள்ளார். இன்று (நவம்பர்'. 21) தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கால்பந்து ஆர்வம் அதிகரித்துள்ள போதிலும், நிர்வாக வளர்ச்சி அதற்கு ஈடுகொடுக்கவில்லை எனக் கவலை தெரிவித்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகள் கடினமானதாக அமைந்துவிட்டதாகவும், பிஃபா மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பில் இந்தியாவுக்கு முன்பு இருந்த முக்கியத்துவம் தற்போது குறைந்துவிட்டதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சூடுபிடிக்கும் போட்டி

டிசம்பர் 20 தேர்தலில் பிரபுல் படேல் மீண்டும் களம் இறங்குகிறாரா?

கடந்த 2009 முதல் 2022 வரை ஏஐஎஃப்எஃப் தலைவராகப் பணியாற்றிய பிரபுல் படேல், கட்டாய நான்கு ஆண்டுகால இடைவெளியை (Cooling-off period) நிறைவு செய்துள்ளதால், டிசம்பர் 20 தேர்தலில் மீண்டும் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளார்.

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், அனைத்துத் தரப்பினரும் சுயபரிசோதனை செய்து கால்பந்திற்குச் சரியான திசையைக் காட்ட வேண்டும் என அவர் பதிவிட்டிருப்பது, மீண்டும் போட்டியிடுவார் என்ற ஊகங்களை வலுப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், உத்தரப் பிரதேச கால்பந்து சங்கத் தலைவர் அரவிந்த் மேனன் அடிமட்ட கால்பந்து வளர்ச்சியை முன்வைத்துத் தலைவர் பதவிக்கான போட்டியில் அதிகாரப்பூர்வமாகக் குதித்துள்ளார்.

நிதி நெருக்கடி

கல்யாண் சௌபேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய முன்னாள் வீரர்கள்

தற்போதைய தலைவர் கல்யாண் சௌபேவின் நிர்வாகத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பனாமா, பிரேசில், உருகுவே அணிகளுக்கு எதிரான நட்புப் போட்டிகளால் ரூ.85 கோடி வரை நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், அதனைச் சரிகட்ட நிரந்தர வைப்புத்தொகையை எடுக்க சௌபே திட்டமிட்டதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பாய்ச்சுங் பூட்டியா தலைமையிலான 15 முன்னாள் வீரர்கள், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்குக் கடிதம் எழுதித் தலையிடுமாறு கோரியுள்ளனர்.

இதனால், டிசம்பர் 20 தேர்தல் இந்திய கால்பந்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியத் திருப்புமுனையாக மாறியுள்ளது.

ADVERTISEMENT