ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 பதக்கங்கள்; பிரதமர் மோடி விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து
சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா சனிக்கிழமை (அக்டோபர் 7) அதிகாரப்பூர்வமாக 100 பதக்கங்களை எட்டி சாதனை படைத்துள்ளது. இதற்காக இந்தியாவின் விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் செயல்திறன் ஒரு முக்கியமான சாதனை என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்த வெற்றியால் இந்திய மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்றார். அக்டோபர் 10 ஆம் தேதி விளையாட்டு வீரர்களுக்கு விருந்தளிப்பதாகவும் பிரதமர் அறிவித்தார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2018ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் 16 தங்கம், 23 வெள்ளி, 31 வெண்கலம் என 70 பதக்கங்கள் வென்றதே இந்தியாவின் முந்தைய சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 : இந்தியாவின் பதக்க வேட்டை
2023 ஆசிய விளையாட்டுப் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில், மகளிர் கபடி போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றதன் மூலம் 100 பதக்கங்கள் எனும் மைல்கல்லை எட்டியது. இதில் 25 தங்கம், 35 வெள்ளி மற்றும் 40 வெண்கல பதக்கங்கள் அடங்கும். விளையாட்டுப் போட்டிகளை பொறுத்தவரை தடகளத்தில் அதிகபட்சமாக 29 பதக்கங்களை இந்தியா குவித்துள்ளது. இதில் 6 தங்கம், 14 வெள்ளி மற்றும் 9 வெண்கல பதக்கங்கள் அடங்கும். அதே நேரத்தில், தங்கத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், துப்பாக்கிச் சுடுதலில் 7 அதிகபட்சமாக 7 தங்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.