வாரணாசியில் சிவன் வடிவில் கட்டப்படும் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டல்
வாரணாசியில் வரவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (செப்டம்பர் 23) அடிக்கல் நாட்டுகிறார். இதன் மூலம் ஆன்மீக நகரமாக உள்ள வாரணாசி, அதிநவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்ட உடன் கிரிக்கெட் விளையாட்டின் மையமாக மாற உள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையின்படி, சுமார் 31 ஏக்கர் பரப்பளவில் 7 ஆடுகளங்களைக் கொண்ட இந்த மைதானத்தின் கட்டுமானத்திற்காக தோராயமாக ரூ.350 கோடி செலவிடப்படும். 30,000 பார்வையாளர்கள் கொள்ளளவுடன் இந்த மைதானம் காட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாரணாசி சிவன் கோவிலுக்கு பிரபலம் என்பதால், இந்த மைதானம் சிவனை பிரதிபலிக்கும் வகையில் கட்டப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
வாரணாசி கிரிக்கெட் ஸ்டேடியத்தின் உள்கட்டமைப்பு சிறப்பம்சங்கள்
வாரணாசி கிரிக்கெட் ஸ்டேடியத்தின் உள்கட்டமைப்பு முழுவதும் நகரத்தின் சிவ பக்தியை சித்தரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்படி, மைதானம் முழுவதும் மேற்கூரை சிவனின் தலையில் உள்ள பிறை வடிவத்தில் இருக்கும். மேலும், ஃப்ளட் லைட்கள் முழுவதும் சிவனின் திரிசூல வடிவத்தில் கட்டமைக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. இது தவிர, நுழைவாயில் மற்றும் ஓய்வறை சிவபெருமானின் உடுக்கையை ஒத்திருக்கும். அரங்கின் வெளிப்புறம் உலோக சட்டங்களில் மர ஆப்பிள் இலைகளின் பெரிய வடிவங்களைக் கொண்டிருக்கும். இதற்கிடையே, சனிக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் பிசிசிஐ நிர்வாகிகள் மட்டுமல்லாது இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.