கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் இந்திய வீரர் பால் வால்தாட்டி
முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக 39 வயதான இந்திய கிரிக்கெட் வீரர் பால் வால்தாட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மகாராஷ்ட்ராவை சேர்ந்த வால்தாட்டி, மும்பை கிரிக்கெட் சங்க (எம்சிஏ) செயலாளர் அஜிங்க்யா நாயக்கிற்கு, தனது ஓய்வு குறித்து முறைப்படி மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அந்த மின்னஞ்சலில் தனது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கையில் ஐபிஎல் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பளித்த பிசிசிஐ மற்றும் எம்சிஏவுக்கு நன்றி தெரிவித்தார். 2011 இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய போது சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு எதிராக 63 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 120 ரன்கள் எடுத்ததற்காக அவர் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறார்.
காயங்களால் வாய்ப்பை இழந்த பால் வால்தாட்டி
2002 யு19 உலகக்கோப்பை போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக பேட்டிங் செய்தபோது கண்ணில் பந்து பட்டு பார்வைக்குறைபாடு ஏற்பட்டது. பல அறுவை சிகிச்சைகளை செய்து கடுமையாக போராடி அதிலிருந்து மீண்டு வந்த பால் வால்தாட்டி, முதல் தர கிரிக்கெட் மற்றும் ஐபிஎல்லில் விளையாடினார். 2011இல் சதமடித்த பிறகு, இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மணிக்கட்டில் காயம் ஏற்பட்டு வாய்ப்பை இழந்தார். அதன் பிறகு, இந்திய அணியில் கடைசி வரை வாய்ப்பு கிடைக்காமலேயே போய் தற்போது ஓய்வை அறிவித்துள்ளார். இதுவரை ஐந்து முதல்தர மற்றும் நான்கு லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ள வால்தாட்டி, ஐபிஎல்லில் 23 போட்டிகள் உட்பட 34 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.