2024 டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றது பப்புவா நியூ கினியா
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2024 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பைக்கு பப்புவா நியூ கினியா தகுதி பெற்றுள்ளது. முன்னதாக, வெள்ளியன்று (ஜூலை 28) நடந்த போட்டியில் பிலிப்பைன்ஸை 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதைத் தொடர்ந்து பப்புவா நியூ கினியா தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் குவித்தது. அந்த அணியின் டோனி உரா, கேப்டன் ஆசாத் வாலா, சார்லஸ் அமினி ஆகிய மூவரும் அரைசதம் கடந்தனர். இதையடுத்து களமிறங்கிய பிலிப்பைன்ஸ் 20 ஓவர் வரை போராடி 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
2024 டி20 உலகக்கோப்பையில் 20 அணிகள்
கிரிக்கெட்டில் உலக நாடுகளின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், 2024 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் 20 அணிகள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த உலகக்கோப்பையில் விளையாடி 8 அணிகளும், போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மேலும், தரவரிசையில் அடுத்த இரண்டு இடங்களில் உள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசமும் நேரடியாக தேர்வாகியுள்ளன. இவை தகுதி தகுதிச் சுற்று மூலம் ஐரோப்பாவில் இருந்து அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளும், கிழக்காசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் இருந்து பப்புவா நியூ கினியாவும் தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய ஐந்து அணிகள் ஆசியா (2), அமெரிக்கா (1), ஆப்பிரிக்கா (2) பகுதிகளில் இருந்து தகுதிச்சுற்று மூலம் தேர்வு செய்யப்படும்.