BANvsPAK: இலக்கை எளிதாக சேஸ் செய்து போட்டியை வென்றது பாகிஸ்தான்
ஆசிய கோப்பைத் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை செய்தன. டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் சகிப் அல் ஹசன், முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியில், கேப்டன் சகிப் அல் ஹசன் மற்றும் விக்கெட் கீப்பர் முஷ்ஃபிகுர் ரஹ்மான் ஆகிய இருவரை தவிர பிற பேட்டர்கள் யாரும் சோபிக்கவில்லை. பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சின் காரணமாக மற்ற அனைத்து பேட்டர்களும் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். முஷ்ஃபிகுரின் 64 ரன்கள் மற்றும் சகிப்பின் 53 ரன்களின் உதவியுடன், 192 ரன்களைக் குவித்து, பாகிஸ்தான் அணிக்கு 193 ரன்களை இலக்காக நிர்ணயித்து வங்கதேசம்.
எளிதாக இலக்கை சேஸ் செய்த பாகிஸ்தான்:
இரண்டாவதாகக் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் பேட்டர்களுக்கு, வங்கதேச பந்துவீச்சாளர்கள் எந்த சிரமத்தையும் கொடுக்கவில்லை. பாகிஸ்தான் சார்பாக ஃபக்கர் ஸமான் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். ஃபக்கர் ஸமான் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தாலும், இமாம்-உல்-ஹக் நிலைத்து நின்று ஆடி 78 ரன்களைக் குவித்தார். பாகிஸ்தானின் விக்கெட் கீப்பரான முகமது ரிஸ்வானும் இமாம்-உல்-ஹக்குடன் இணைந்து அரைசதம் கடந்தார். வங்கதேச அணியின் சார்பில் டஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் மெஹிடி ஹாசன் ஆகியோர் மட்டும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். ரிஸ்வான் மற்றும் இமாம் கூட்டணியில் 39 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை எளிதாக கடந்து சூப்பர் 4 சுற்றில் தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி.