ஆசிய கோப்பையை இந்தியா கைப்பற்றினாலும் உலகின் நம்பர் 1 அணியாக மாறியது பாகிஸ்தான்
செய்தி முன்னோட்டம்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பெற்ற தோல்வியால், ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
முன்னதாக, ஆசிய கோப்பை தொடங்கும்போது, ஒருநாள் தரவரிசையில் நம்பர் 1 இடத்துடன் களமிறங்கிய பாகிஸ்தான், இந்தியா மற்றும் இலங்கையிடம் பெற்ற தொடர் தோல்வியால் முதலிடத்தை இழந்து மூன்றாவது இடத்திற்கு பின்தங்கியது.
அப்போது ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருந்தது. இந்தியா முதலிடம் பெறும் வாய்ப்பை பெற்றது.
ஆனால், ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று எட்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றினாலும், வங்கதேசத்திடம் பெற்ற தோல்வியால் அந்த வாய்ப்பை இழந்தது.
இதற்கிடையே, தென்னாப்பிரிக்காவில் நடந்த ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா கடைசி 3 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது.
Pakistan becomes No 1 in ODI Ranking
தலா 115 ரேட்டிங் புள்ளிகளுடன் இந்தியா மற்றும் பாகிஸ்தான்
5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்காவிடம் இழந்ததோடு, ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை இழந்து 114 ரேட்டிங் புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திற்கு பின்தங்கிவிட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் தலா 115 ரேட்டிங் புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தாலும், இதர கணக்கீடுகளின் அடிப்படையில், பாகிஸ்தான் தரவரிசையில் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளது.
இந்தியா தற்போது இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், அடுத்து வரவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றி முதலிடத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னோட்டமாக நடக்கும் இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் செப்டம்பர் 22 முதல் 27 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது.