பாகிஸ்தான் இனி நமக்கு ஒரு போட்டியே இல்லை: பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் கருத்து
செய்தி முன்னோட்டம்
ஜப்பானில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டது. இறுதிவரை பரபரப்பாகச் சென்ற இந்த ஆட்டத்திற்குப் பிறகு மௌனம் கலைத்துள்ள இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் மிதுன் மன்ஹாஸ், போட்டிச் சூழலில் அழுத்தங்களை எதிர்கொள்வதில் இந்திய அணிக்கு இணையாக உலகில் வேறு எந்த அணியும் இல்லை என்று பாராட்டியுள்ளார். அதே வேளையில், முந்தைய காலங்களைப் போல பாகிஸ்தான் அணி இப்போது இந்தியாவிற்குச் சவாலான போட்டியைக் கொடுப்பதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மன்ஹாஸ் பாராட்டு
நெருக்கடிகளைச் சமாளிப்பதில் இந்தியாவே தலைசிறந்தது
இறுதி ஆட்டத்தின் வெற்றி குறித்துப் பேசிய பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ், "நமது பரம எதிரியான பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தியுள்ளது.
ஆனால், உண்மையைக் கூற வேண்டுமென்றால் பாகிஸ்தான் அணி இப்போது நமக்கு அந்தளவிற்குப் பெரிய சவாலையோ போட்டியையோ தருவதில்லை என்று நான் கருதுகிறேன்.
அதே சமயம், இக்கட்டான நெருக்கடி நிலைகளை நமது வீரர்கள் களத்தில் கையாண்ட விதம் பாரட்டுக்குரியது.
அழுத்தங்களை இந்த அளவுக்குத் திறம்படக் கையாளும் திறமை உலகில் வேறு எந்த அணிக்கும் இல்லை.
இத்தொடரிலேயே இந்தியாதான் மிகச் சிறந்த அணி. நடப்பு சாம்பியனாகத் தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்த நமது வீரர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது." என்று தெரிவித்தார்.
பேட்டிங் வரிசை
பந்துவீச்சாளர்களின் கூட்டு முயற்சி
இந்திய அணியின் அபார ஆட்டத்திற்கு வலுசேர்த்த அபிஷேக் சர்மா (61 ரன்கள்) மற்றும் திலக் வர்மா (51 ரன்கள்) ஆகியோரை மிதுன் மன்ஹாஸ் வெகுவாகப் பாராட்டினார்.
கிரிக்கெட் என்பது கூட்டு முயற்சி. தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா ஆட்டத்தின் வேகத்தை நிர்ணயித்துக் கொடுத்தார்.
மிடில் ஆர்டரில் களமிறங்கிய திலக் வர்மா சிறப்பாக விளையாடி ஆட்டத்தை முடித்து வைத்தார்.
இந்திய அணியின் பேட்டிங் வரிசை வியக்கத்தக்க வகையில் அமைந்தது. அதேபோல், ஒரு வலுவான ஸ்கோரைப் பாதுகாப்பதில் பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டுப் பங்களிப்பை வழங்கி வெற்றியை உறுதி செய்துள்ளனர் என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.