Page Loader
ஒருநாள் உலகக்கோப்பை 2023 : 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

ஒருநாள் உலகக்கோப்பை 2023 : 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

எழுதியவர் Sekar Chinnappan
Sep 28, 2023
03:58 pm

செய்தி முன்னோட்டம்

அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் உலகக்கோப்பையில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஹைதராபாத் வந்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவுக்கு வந்துள்ளது. முன்னதாக, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, துபாய் சென்று அங்கிருந்து ஹைதராபாத் வர திட்டமிட்டிருந்தது. எனினும், விசா தாமதம் போன்றவற்றால், பாகிஸ்தான் அணி லாகூரில் இருந்து புதன்கிழமை (செப்டம்பர் 27) இரவு கிளம்பி ஹைதராபாத் வந்தடைந்துள்ளது. பாகிஸ்தான் அணி உலகக்கோப்பைக்கு முன்னதாக, ஹைதராபாத்தில் செப்டம்பர் 29 அன்று தனது தொடக்க பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்திற்கு எதிராகவும், அக்டோபர் 3 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் விளையாட உள்ளது.

Pakistan cricket team reaches India after 7 years

2016 டி20 உலகக்கோப்பைக்கு பிறகு முதல்முறையாக இந்தியா வந்துள்ள பாகிஸ்தான்

இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டமான உறவுகள் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேர் மோதுகின்றன. அந்த வகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடைசியாக 2016 இல் நடந்த டி20 உலகக்கோப்பைக்காக இந்தியா வந்த நிலையில், அதன் பிறகு தற்போதுதான் இந்தியா வந்துள்ளது. 2016 இல் இந்தியா வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்த வீரர்களில் முகமது நவாஸ் மற்றும் சல்மான் அலி ஆகா ஆகியோர் மட்டுமே தற்போதைய அணியில் இடம் பெற்றுள்ளனர். அணியின் கேப்டனான பாபர் அசாம் 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த டி20 உலகக்கோப்பையில் காயம் காரணமாக விளையாட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.