அமெரிக்க கிரிக்கெட் லீக்கில் களமிறங்கும் ஐபிஎல் அணிகள்
ஐபிஎல் அணியான டெல்லி கேபிடல்ஸ், மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லாவுடன் இணைந்து, அமெரிக்காவின் புதிய டி20 ஃபிரான்சைஸ் லீக்கான மேஜர் லீக் கிரிக்கெட்டில் (எம்எல்சி) சியாட்டில் அணியை தற்போது வாங்கியுள்ளது. இந்த அணிக்கு சியாட்டில் ஓர்காஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஓர்கா என்பது சியாட்டிலைச் சுற்றியுள்ள கடலில் காணப்படும் ஒரு ஆட்கொல்லி திமிங்கலமாகும். "டெல்லி கேபிடல்ஸின் இணை உரிமையாளர் ஜிஎம்ஆர் குழுமம், உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட் அணியை உருவாக்கவும் இயக்கவும் உதவுவதற்காக சியாட்டில் ஓர்காஸுடன் கூட்டு சேரும்" என்று எம்எல்சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேஜர் லீக் கிரிக்கெட் முழு விபரம்
மொத்தம் ஆறு அணிகளுடன் விளையாடப்படும் எம்எல்சி லீக் இந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ஆகியவையும் இதில் இணைந்துள்ளன. கேகேஆர் லாஸ் ஏஞ்செல்ஸ் அணியையும், மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியையும் சொந்தமாக வாங்கியுள்ள நிலையில், சிஎஸ்கே உள்ளூர் முதலீட்டாளர் ஒருவருடன் சேர்ந்து டெக்சாஸ் அணியை வாங்கியுள்ளன. இதர அணிகளான வாஷிங்டன் டிசி மற்றும் சான் பிரான்சிஸ்கோ அணிகளை அமெரிக்க வாழ் இந்திய தொழிலதிபர்கள் வாங்கியுள்ளனர்.