ODI WorldCup Final : அகமதாபாத்தில் லட்சங்களில் எகிறும் ஹோட்டல் விலை; ரசிகர்கள் ஷாக்!
செய்தி முன்னோட்டம்
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) மோதுகின்றன.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆட்டத்தைக் காண முழு தேசமும் ஆவலுடன் காத்திருக்கிறது.
அகமதாபாத் மைதானம், 1 லட்சம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் மிக பிரமாண்டமானது என்பதால் போட்டியை நேரில் காண வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பலர் அகமதாபாத் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், போட்டி நடக்கும் சமயத்தை ஒட்டிய நாட்களில், ஹோட்டல் விலைகள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளன.
வழக்கமாக சில ஆயிரங்களில் இருக்கும் விலைகள் தற்போது சில லட்சங்களாக உயர்ந்துள்ளதால், போட்டியை நேரில் காண வர திட்டமிட்டிருந்த வெளியூர் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Ahmedabad Hotel prices soar high amid IND vs AUS Final
விமான டிக்கெட் விலையும் கிடுகிடு உயர்வு
ஹோட்டல் விலைகள் மட்டுமல்லாது, விமான டிக்கெட் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
குறிப்பாக மும்பையில் இருந்து அகமதாபாத் செல்வதற்கான டிக்கெட் விலை சுமார் ரூ.40,000 முதல் விற்கப்படுகிறது.
இதுகுறித்து புக்கிங் டாட் காம் நிறுவனத்தின் இந்தியா, இலங்கை, மாலத்தீவு மற்றும் இந்தோனேசியாவுக்கான கன்ட்ரி மேனேஜர் சந்தோஷ் குமார் கூறும்போது, "ஐசிசி ஆடவர் உலகக்கோப்பை 2023ஐ நேரில் பார்ப்பதற்கான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இதனால் பயணம் மற்றும் தங்கும் இடங்களுக்கான தேவை நகரம் முழுவதும் எதிர்பாராத வகையில் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா இறுதிப் போட்டிக்கு வருவதால், இந்திய அணியின் ஆட்டத்தை நேரில் பார்ப்பதற்கான உற்சாகம், இறுதிப் போட்டிக்கான அகமதாபாத்தின் தேடல்களை அதிகரிக்க வழிவகுத்தது." என்று கூறியுள்ளார்.