ODI World Cup : ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள்; 3வது முறையாக 400+ ஸ்கோர்; தென்னாப்பிரிக்கா சாதனை
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் சனிக்கிழமை (அக்டோபர் 7) நடந்த நான்காவது போட்டியில் தென்னாப்பிரிக்கா இலங்கை கிரிக்கெட் அணிக்கு 429 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. முன்னதாக, டெல்லி அருண் ஜெட்லீ ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான டெம்பா பவுமா 8 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். எனினும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் அபாரமாக விளையாடி சதமடித்து 100 ரன்கள் குவித்தார். இதேபோல், மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் களமிறங்கிய ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸென் மற்றும் ஐடென் மார்க்ரம் முறையே 108 மற்றும் 106 ரன்கள் எடுத்தனர்.
இலங்கைக்கு 429 ரன்கள் இலக்கு
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 428 ரன்கள் குவித்தது. இதன் மூலம், ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் குவித்த அணி என்ற சாதனை படைத்ததோடு, மூன்றாவது முறையாக 400க்கும் மேல் ரன் அடித்த அணி என்ற சாதனையையும் தென்னாப்பிரிக்கா படைத்துள்ளது. முந்தைய இரண்டு 400+ ஸ்கோர்களும் 2015 உலகக்கோப்பையில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்காவைத் தவிர இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மட்டும் தலா ஒருமுறை 400+ ஸ்கோரை எடுத்துள்ளது. மேலும், ஒட்டுமொத்தமாக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலும், அதிகபட்சமாக தற்போது எட்டாவது முறையாக 400க்கும் மேல் ரன் எடுத்து தென்னாப்பிரிக்கா சாதனை படைத்துள்ளது.