ஒருநாள் உலகக்கோப்பை 2023 : இந்தியா விளையாடும் போட்டிக்கான டிக்கெட் விலை கிடுகிடு உயர்வு
செய்தி முன்னோட்டம்
பெங்கால் கிரிக்கெட் சங்கம் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை 2023 போட்டிகளுக்கான டிக்கெட் விலை பட்டியலை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, கொல்கத்தாவில் அடுத்தடுத்து நடக்க உள்ள போட்டிகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்க, சங்க நிர்வாகிகள் குழு கூட்டம், திங்கட்கிழமை (ஜூலை 10) நடந்தது. இதில் டிக்கெட் விலையை உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஸ்நேஹாஷிஸ் கங்குலி, டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதை அறிவித்ததோடு, ஒருநாள் உலகக்கோப்பை போன்ற மதிப்புமிக்க நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கான செலவுகள் அதிகரித்து வருவதாகக் கூறினார்.
இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள், குறிப்பாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மோதல் உட்பட, தங்களுக்குப் பிடித்த வீரர்களின் அதிரடியைப் பார்க்க அதிகமான தொகையை செலவிட வேண்டியிருக்கும்.
ticket prices in eden gardens
ஒருநாள் உலகக்கோப்பையில் ஈடன் கார்டனில் ஐந்து போட்டிகள்
ஈடன் கார்டன் மைதானத்தில் ஐந்து கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்தியா-தென்னாப்பிரிக்கா மற்றும் அரையிறுதிக்கான மேல் அடுக்கு டிக்கெட் விலை 900 ரூபாயில் இருந்து தொடங்கும்.
இந்த போட்டிகளுக்கு டி, எச் பிளாக் இருக்கைகளுக்கு ரூ.1,500, சி, கே பிளாக் இருக்கைகளுக்கு ரூ.2,500 மற்றும் பி, எல் பிளாக் இருக்கைகளுக்கு ரூ.3,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசம் மற்றும் குவாலிஃபையர் 1 விளையாடும் போட்டிகளுக்கு டிக்கெட்டுகள் ரூ 650 (மேல் அடுக்குகள்), ரூ 1,000 (டி,எச்) மற்றும் ரூ 1,500 (பி,சி,கே,எல்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசம் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளுக்கு ரூ.800 (மேல் அடுக்கு), ரூ.1,200 (டி,எச்), ரூ.2,000 (சி,கே) மற்றும் ரூ.2,200 (பி,எல்) என டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.