சென்னை, பெங்களூரில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் சென்னை மற்றும் பெங்களூர் போன்ற சில மைதானங்களில் விளையாடுவது தங்களுக்கு வசதியாக இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட காலமாக நீடித்து வந்த ஆசிய கோப்பை போட்டிக்கான முட்டுக்கட்டை முடிவுக்கு வந்துள்ளதால், இப்போது பாகிஸ்தான் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் உலகக் கோப்பைக்காக இந்தியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள வரைவு போட்டி அட்டவணையில் இந்தியா-பாகிஸ்தான் மோதல் அக்டோபர் 15 ஆம் தேதி அகமதாபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், உலகக் கோப்பை அட்டவணையை அறிவிப்பதற்கு முன், ஐசிசி பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து உறுப்பு நாடுகளிடமும் வரைவு அட்டவணை மீதான பரிந்துரைகளைக் கேட்டுள்ளது.
வரைவு அட்டவணை மீதான பாகிஸ்தானின் பரிந்துரைகள்
ஐசிசி மற்றும் பிசிசிஐ வழங்கியுள்ள ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கான பாகிஸ்தானின் அட்டவணையை அங்கீகரிக்கும் பணி வாரியத்தின் தரவு, பகுப்பாய்வு மற்றும் குழு உத்தி நிபுணர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் அளித்த அறிக்கையில், வரலாற்று ரீதியாகவும் புள்ளிவிவர ரீதியாகவும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான இடம் என்பதால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு சென்னையை ஏற்க வேண்டாம் என கிரிக்கெட் வாரியத்திற்கு தெரிவித்துள்ளது. மேலும் பெங்களூரில் நடக்க உள்ள ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியையும் இடம் மாற்ற வேண்டும் என கோரியுள்ளதாக தெரிகிறது. எனினும், பாதுகாப்பு உள்ளிட்ட வலுவான காரணங்கள் இருந்தால் மட்டுமே ஐசிசி போட்டியை மாற்றும் பரிந்துரையை ஏற்கும் என கூறப்படுகிறது.