ஒருநாள் உலகக்கோப்பை : இந்தியா-பாகிஸ்தான் மோதல் அக்டோபர் 14க்கு மாற்றம் எனத் தகவல்
வரவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் மோதல் முதலில் திட்டமிட்டதை விட ஒருநாள் முன்னதாக அக்டோபர் 14 ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்டவணையில் மேலும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும் இந்த மாற்றங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு திங்கட்கிழமை (ஜூலை 31) வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கடந்த வாரம் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ஒருநாள் உலகக்கோப்பை அட்டவணையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறினார். 4-5 நாட்கள் இடைவெளியைக் குறைக்கும் வகையில் போட்டிகளின் தேதிகள் மற்றும் நேரங்கள் மட்டும் மாற்றப்படும் என்றும் மைதானங்கள் மாற்றப்படாது என்றும் அவர் கூறினார்.
இந்தியா-பாகிஸ்தான் போட்டி அட்டவணை மாற்றத்தின் பின்னணி
2023 ஒருநாள் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி மோதும் போட்டியை மறுதிட்டமிடுவதற்கான முடிவின் பின்னணியில் நவராத்திரி பண்டிகை உள்ளது. இந்து பண்டிகையான நவராத்திரியின் தொடக்க நாளான அக்டோபர் 15 அன்று, அகமதாபாத்தில் போதுமான பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து பாதுகாப்பு அமைப்புகள் கவலை தெரிவித்ததால் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. எனினும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலை காணும் எதிர்பார்ப்பில், அகமதாபாத்தில் விமானங்கள் மற்றும் ஹோட்டல்களை முன்பதிவு செய்தல் உள்ளிட்ட பயண ஏற்பாடுகளை செய்திருந்த ரசிகர்களிடையே இந்த தகவல் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், 7 போட்டிகளிலும் இந்தியாவே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.