Page Loader
விம்பிள்டன் 2023 : அரையிறுதியை எட்டி ரோஜர் ஃபெடரரின் சாதனையை சமன் செய்த நோவக் ஜோகோவிச்
ரோஜர் ஃபெடரரின் சாதனையை சமன் செய்த நோவக் ஜோகோவிச்

விம்பிள்டன் 2023 : அரையிறுதியை எட்டி ரோஜர் ஃபெடரரின் சாதனையை சமன் செய்த நோவக் ஜோகோவிச்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 12, 2023
01:50 pm

செய்தி முன்னோட்டம்

விம்பிள்டன் 2023 தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், செவ்வாயன்று (ஜூலை 11) நடந்த போட்டியில், ஆண்ட்ரே ருப்லெவ்வை 4-6, 6-1, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி நோவக் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார். இதையடுத்து, அரையிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னரை எதிர்கொள்கிறார். இதற்கிடையே, 12வது முறையாக விம்பிள்டனில் அரையிறுதியை எட்டியுள்ள நோவக் ஜோகோவிச், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 46வது முறையாக அரையிறுதியை எட்டி, டென்னிஸில் இருந்து ஓய்வுபெற்ற ரோஜர் ஃபெடரரின் சாதனையை சமன் செய்துள்ளார். 36 வயதான நோவக் ஜோகோவிச், செவ்வாயன்று நடந்த காலிறுதி போட்டியில் பங்கேற்றதன் மூலம், 400 வது கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடி புதிய மைல்கல்லையும் எட்டியுள்ளார்.

novak djokovic qualifies semi final

கோப்பையை வெல்லும் நம்பிக்கையுடன் இருப்பதாக நோவக் ஜோகோவிச் பேட்டி

கடந்த நான்கு முறை தொடர்ச்சியாக விம்பிள்டனை கைப்பற்றியுள்ள டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச், இந்த முறையும் நிச்சயமாக கோப்பையை கைப்பற்றும் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஜோகோவிச்சின் நம்பிக்கை இருந்தபோதிலும், உலகின் நம்பர் ஒன் மற்றும் யுஎஸ் ஓபன் சாம்பியனான கார்லோஸ் அல்கராஸ், இன்னும் போட்டியில் இருக்கிறார். அவர் புதன்கிழமை (ஜூலை 12), சக 20 வயதான ஹோல்கர் ரூனை எதிர்த்து தனது காலிறுதியில் விளையாடுகிறார். 2021 ஆம் ஆண்டு, அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சின் முதல் காலண்டர் கிராண்ட்ஸ்லாம்க்கான முயற்சியை முறியடித்த டேனியல் மெட்வெடேவ், தரவரிசையில் இல்லாத கிறிஸ்டோபர் யூபாங்க்ஸை காலிறுதியில் எதிர்கொள்கிறார்.