அஸ்வினை விளையாடும் 11இல் சேர்க்காதது சரியே : ஹர்பஜன் சிங் கருத்து!
லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்தியாவின் பிளேயிங் லெவன் அணியில் அஸ்வின் ரவிச்சந்திரன் சேர்க்கப்படாதது குறித்து தான் ஆச்சரியப்படவில்லை என்று ஹர்பஜன் சிங் கூறினார். மைதான நிலவரத்தின் அடிப்படையில், அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரில் ஒருவருக்கு தான் வாய்ப்பு என்று ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்தார். இந்தியாவுக்கு வலுவான பேட்டிங் யூனிட் இருப்பதாகவும், அவர்களின் முதல் ஆறு பேட்டர்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பதற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்றும் ஹர்பஜன் சிங் மேலும் கூறினார்.
நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் குறித்து ஹர்பஜன் சிங் கருத்து
சுழற்பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜாவை மட்டும் வைத்துக் கொண்டு, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை இந்திய அணி கொண்டுள்ளது சரியான முடிவு தான் என தெரிவித்தார். மேலும் பேட்டிங்கில் ஷுப்மான் கில், விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, சேதேஷ்வர் புஜாரா ஆகியோர் சிறப்பான ஃபார்மில் இருப்பது அணிக்கு கூடுதல் பலம் என்றார். இதற்கிடையே விக்கெட் கீப்பிங்கை பொறுத்தவரை கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷான் சேர்க்கப்பட்டாலும், அவருக்கு விளையாடும் 11'இல் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கே.எஸ்.பாரத் அணியின் விக்கெட் கீப்பராக செயல்படுகிறார்.