வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா இடம்பெற மாட்டார்கள் என தகவல்
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் இந்திய கிரிக்கெட் அணிகள் அறிவிக்கப்பட்டாலும், டி20 அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கு காரணம் காலியாக உள்ள தேர்வுக்குழு தலைவரை நியமித்த பிறகு, முடிவெடுத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ திட்டமிட்டுள்ளது தான் என கூறப்படுகிறது. இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. தேர்வுக்குழு பொறுப்பில் உள்ளவர்கள் வேறு பொறுப்புகளில் இருக்கக்கூடாது எனும் நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலிருந்து சமீபத்தில் அஜித் அகர்கர் வெளியேற்றப்பட்டது இதை உறுதி செய்யும் விதமாக உள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 2024 டி20 உலகக்கோப்பை வரை தொடரும் புதிய சுழற்சியின் தொடக்கமாக இருப்பதால், பிசிசிஐ அணித்தேர்வில் அவசரம் காட்டவில்லை எனத் தெரிகிறது.
டி20 அணியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு
எப்படியிருந்தாலும், ஹர்திக் பாண்டியா தலைமையில் தான் டி20 அணி அறிவிக்கப்படும் என்பதிலும், இதில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இருவரும் சேர்க்கப்படமாட்டார்கள் என்பதிலும் பிசிசிஐ உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், முகமது ஷமி மீண்டும் டி20 போட்டிகளில் களமிறங்க வாய்ப்புள்ளது. மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் அவர் இடம்பெறவில்லை. மேலும் ஐபிஎல் 2023இல் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜிதேஷ் சர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகியோரும் தேர்வுக்குழுவினரின் பார்வையில் உள்ளனர். மொத்தத்தில் 2024 டி20 உலகக்கோப்பைக்கு வலுவான அணியை தயார் செய்யும் விதமாக சிறப்பாக செயல்படும் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.