காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்துகிறோமா? குஜராத் அரசு விளக்கம்
2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று குஜராத் அரசு அதிகாரிகள் புதன்கிழமை (ஜூலை 19) தெளிவுபடுத்தினர். முன்னதாக, ஆஸ்திரேலியா காமன்வெல்த் போட்டியை நடத்தும் முடிவிலிருந்து பின்வாங்கிய நிலையில், அகமதாபாத்தில் அதை நடத்த குஜராத் அரசு விரும்புவதாக தகவல் பரவியது. இந்நிலையில், குஜராத் அரசு அதிகாரிகள் இதை மறுத்துள்ளதோடு, தங்கள் கவனம் முழுவதும் 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்தும் உரிமையைப் பெறுவதில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஹோஸ்டிங் உரிமைகளைப் பெறுவதற்கு மாநில அரசு யோசிக்கிறதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, பெயர் வெளியிடாத ஒரு மூத்த அரசாங்க அதிகாரி, "இதுவரை அப்படிப்பட்ட எந்த நடவடிக்கையும் இருப்பதாக தனக்கு தெரியவில்லை." என்றார்.
ஒலிம்பிக் போட்டியின் உரிமையை பெறுவதற்காக மும்முரமாக செயல்படும் குஜராத்
குஜராத் அரசு ஏற்கனவே 2036 கோடைகால ஒலிம்பிக் போட்டியை நடத்தும் உரிமைகளைப் பெறுவதை இலக்காகக் கொண்டிருப்பதாக முன்னதாக அறிவித்தது. மேலும் தங்கள் மாநிலத்தில் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வை ஏற்பாடு செய்வது குறித்து அதிகாரிகள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் இணைந்து செயல்படுவர் என குஜராத் அறிவித்திருந்தது. 2036 ஒலிம்பிக்கை நடத்துவதற்கான முயற்சியில் குஜராத் வெற்றி பெற்றால், சில நிகழ்வுகளை நடத்துவதற்கு, மாநில அரசு அகமதாபாத்தில் இரண்டு மெகா விளையாட்டு வளாகங்களை அடையாளம் கண்டுள்ளது. இதில் ஒரு வளாகமாக ஏற்கனவே உள்ள சர்தார் வல்லபாய் படேல் ஸ்போர்ட்ஸ் என்க்ளேவ் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், நாரன்புரா பகுதியில் மற்றொரு விளையாட்டு வளாகம் கட்டப்பட்டு வருகிறது.