பாலியல் புகாரில் சிக்கிய நேபாள கிரிக்கெட் வீரர் ஆசிய கோப்பையில் விளையாட அனுமதி
நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானே மீதான பாலியல் பலாத்கார வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அவர் ஆசிய கோப்பைக்கான நேபாள அணியில் இணைய உள்ளார். 23 வயதே ஆன சுழற்பந்து வீச்சாளர் லாமிச்சானே ஒருகாலத்தில் நேபாள கிரிக்கெட்டில் எழுச்சி நாயகனாக பார்க்கப்பட்டதோடு, அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டை எதிர்கொண்டது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, லாமிச்சானேவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு விளையாடவும் தடை விதிக்கப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மீண்டு வந்துள்ள சந்தீப் லாமிச்சானே
சிறைவாசம் அனுபவித்து வந்த சந்தீப் லாமிச்சானே, கடந்த ஜனவரியில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து நேபாள கிரிக்கெட் வாரியம் அவர் விளையாடுவதற்கு விதித்திருந்த தடையை நீக்கி, அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட அனுமதித்தது. அதன்பிறகு, ஜாமீன் நிபந்தனைகளின் கீழ், லாமிச்சானே ஒருநாள் உலகக்கோப்பை 2023க்கான தகுதிச் சுற்றில் பங்கேற்க ஜிம்பாப்வே சென்றார். இந்நிலையில், ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் நேபாளம் மோதும் நிலையில், அவர் இதில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது. அவரது வழக்கு ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) விசாரணைக்கு வந்த நிலையில், நேபாள நீதிமன்றம் விளையாட அனுமதித்ததோடு, விசாரணையை செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.