Page Loader
ஒருநாள் உலகக்கோப்பை 2023 : களமிறங்கிய முதல் போட்டியிலேயே சாதனை படைத்த முகமது ஷமி
ஒருநாள் உலகக்கோப்பையில் இரண்டாவது அதிக விக்கெட் எடுத்த இந்தியர் என்ற சாதனை படைத்த முகமது ஷமி

ஒருநாள் உலகக்கோப்பை 2023 : களமிறங்கிய முதல் போட்டியிலேயே சாதனை படைத்த முகமது ஷமி

எழுதியவர் Sekar Chinnappan
Oct 22, 2023
05:25 pm

செய்தி முன்னோட்டம்

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பெற்றுள்ளார். தரம்சாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22) நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வில் யங்கை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்தார். ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக, நடந்து வரும் உலகக் கோப்பையில் முகமது ஷமி களமிறங்கும் முதல் போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 31 விக்கெட்டுகளுடன் அனில் கும்ப்ளே இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில், முகமது ஷமி 32 விக்கெட்டுகள் எடுத்து அனில் கும்ப்ளேவை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

Mohammad Shami becomes second most wicket taker in cwc

ஒருநாள் உலகக்கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர்கள்

உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணிக்காக ஜாகீர் கான் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் தலா 44 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக ஷமி மற்றும் கும்ப்ளே உள்ள நிலையில், அவர்களை அடுத்து ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் கபில்தேவ் தலா 28 விக்கெட்டுகளுடன் உள்ளனர். ஒட்டுமொத்தமாக சர்வதேச அளவில் ஒருநாள் உலகக்கோப்பையில் அதிக விக்கெட் எடுத்த வீரராக ஆஸ்திரேலியாவின் மெக்ராத் 71 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து 68 விக்கெட்டுகளுடன் முரளிதரன் இரண்டாவது இடத்திலும், 56 விக்கெட்டுகளுடன் மலிங்கா மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.