டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய இரட்டை சாதனை படைத்த மொயீன் அலி
செய்தி முன்னோட்டம்
இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000+ ரன்கள் மற்றும் 200+ விக்கெட்களை பதிவு செய்த நான்காவது இங்கிலாந்து வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டில் நடந்த ஆஷஸ் 2023 தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் (ஜூலை 20) அவர் இந்த சாதனையை எட்டினார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான இயன் போத்தம், ஆண்ட்ரூ பிளின்டாஃப் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் மட்டுமே இதற்கு முன்பு இந்த சாதனையை செய்திருந்தனர்.
மேலும், ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த சாதனையை செய்த 16வது வீரர் என்ற பெருமையையும் மொயீன் அலி பெற்றுள்ளார்.
moeen ali test comeback
ஓய்வை அறிவித்துவிட்டு மீண்டும் வந்த மொயீன் அலி
மொயீன் அலி 2014 இல் இலங்கைக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக இருந்த மொயீன் அலி, 2021இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்துவிட்டு, ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில், ஆஷஸ் தொடருக்கு முன்னதாக, இங்கிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் காயத்தால் வெளியேறியதால், கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையின் பேரில், மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு திரும்பினார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்களை கடந்துள்ள மொயீன் அலி, ஐந்து சதங்கள் மற்றும் 14 அரைசதங்களை அடித்துள்ளார். மேலும் 201 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.