2027க்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை குறைக்க எம்சிசி வலியுறுத்தல்
கிரிக்கெட் விதிகளின் பாதுகாவலர்களாக அறியப்படும் மேரில்போன் கிரிக்கெட் சங்கம் (எம்சிசி), டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் மகளிர் கிரிக்கெட்டை பாதுகாக்க கூடுதல் நிதியுதவி வழங்க வலியுறுத்தியுள்ளது. மேலும், 2027 உலகக்கோப்பைக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை குறைத்துக் கொள்ளுமாறு பரிந்துரைத்துள்ளது. சமீபத்தில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த கூட்டத்தில், 13 உறுப்பினர்களைக் கொண்ட எம்சிசி, ஒவ்வொரு உலகக் கோப்பைக்கும் முந்தைய ஒரு வருடத்தைத் தவிர, இதர சமயங்களில் இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை நடத்த வேண்டாம் என ஆலோசனை வழங்கியுள்ளது. உலகம் முழுவதும் டி20 கிரிக்கெட் லீக் போட்டிகள் பிரபலமடைந்து வரும் நிலையில், அதை மனதில் வைத்தும் எம்சிசி இந்த ஆலோசனையை வழங்கியது.
அனைத்து உறுப்பு நாடுகளும் பயன்பெறும் வகையில் திட்டங்கள்
பல நாடுகளும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நடத்துவதில் வணிக ரீதியாக சிக்கலை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள எம்சிசி, இதில் ஐசிசி கவனம் செலுத்தி டெஸ்ட் போட்டிகளை மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. 2028 முதலான எதிர்கால கிரிக்கெட் சுழற்சிக்கான திட்டங்களை வகுக்கும், ஐசிசியில் உள்ள அனைத்து முழு உறுப்பு நாடுகளும் வணிக ரீதியாக சம வாய்ப்பை பெறும் வகையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என எம்சிசி ஆலோசனை வழங்கியுள்ளது. மகளிர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ள எம்சிசி, அனைத்து முழு உறுப்பு நாடுகளும் இந்த இரண்டிலும் முதலீடு செய்வதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.