ஒருநாள் கிரிக்கெட்டில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் இலங்கை வீரர் ஆனார் மதீஷ பத்திரனா
வியாழக்கிழமை (ஆகஸ்ட் 31) நடந்த ஆசிய கோப்பை 2023 தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் மதீஷ பத்திரனா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 164 ரன்களுக்கு சுருண்டது. மிகக்குறைந்த ரன்களுக்கு வங்கதேசத்தை சுருட்டியதில் மதீஷ பத்திரனா எடுத்த நான்கு விக்கெட்டுக்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்நிலையில், இந்த நான்கு விக்கெட்டுகள் மூலம் ஆடவர் ஒருநாள் கிரிக்கெட்டில் நான்கு விக்கெட்டுகளை எடுத்த இளம் இலங்கை கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை மதீஷ பத்திரனா பெற்றார். லசித் மலிங்கா போலவே பந்துவீசி பிரபலமான பத்திரனா, தான் பங்குபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியிலேயே நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
சமிந்த வாஸின் சாதனையை முறியடித்த மதீஷ பத்திரனா
20 ஆண்டுகள் மற்றும் 256 நாட்களில், மதீஷ பத்திரனா ஒருநாள் கிரிக்கெட்டில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முன்னதாக இளம் வயதில் 4 விக்கெட்டுகளை எடுத்த இலங்கை வீரர் என்ற சாராதனையை, 400 அல்லது அதற்கு மேற்பட்ட ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் நான்கு வீரர்களில் ஒருவரான ஜாம்பவான் சமிந்த வாஸ் கொண்டிருந்தார். அவர் 20 ஆண்டுகள் மற்றும் 280 நாட்களில் இந்த சாதனையை அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, அடுத்த மலிங்கா என்று அழைக்கப்படும் பத்திரனா இலங்கை கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் திறமைசாலியாக உள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் அவர் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.