வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்
வியாழக்கிழமை வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் தமீம் இக்பால் திடீரென ஓய்வை அறிவித்த நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரியம் வெள்ளிக்கிழமை (ஜூலை 7) ஆப்கானிஸ்தானுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் போட்டிகளில் லிட்டன் தாஸ் அணியை வழிநடத்துவார் என அறிவித்துள்ளது. மொத்தம் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் திட்டமிடப்பட்ட நிலையில், முதல் போட்டி ஏற்கனவே முடிந்துள்ளது. அதில் ஆப்கான் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டு போட்டிகள் மீதமுள்ளன. இதற்கிடையே, வரவிருக்கும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் வங்கதேசத்தை வழிநடத்தவும் லிட்டன் தாஸ் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசனும் கேப்டனுக்கான போட்டியில் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கதேச கிரிக்கெட் அணியில் லிட்டன் தாஸ் கேப்டன்சி விபரம்
28 வயதான லிட்டன் தாஸ் ஏற்கனவே 180 சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் வங்கதேச அணியின் கேப்டனாக இருந்துள்ளார். ஒரு துணை கேப்டனாக, தமீம் இக்பால் இல்லாத நேரத்தில் அணியை வழிநடத்தும் பொறுப்பை கொண்டிருந்தார். அவர் கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வங்கதேசத்தை வழிநடத்தினார் மற்றும் சொந்த மண்ணில் மறக்கமுடியாத 2-1 தொடரை வென்றார். காயம் காரணமாக ஷாகிப் அல் ஹசன் இல்லாத நிலையில் கடந்த மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்டில் வங்கதேசத்தை வெற்றிபெற அவர் வழிநடத்தினார். தற்போதைக்கு லிட்டன் தாஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமீம் இக்பால் தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி உள்ளது.