பார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட்: சேனா நாடுகளில் கபில்தேவின் சாதனை சமன் செய்தார் ஜஸ்ப்ரீத் பும்ரா
பெர்த்தில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, ஐந்து விக்கெட்டுகளை (5/30) கைப்பற்றி, கபில்தேவின் சாதனையை சமன் செய்தார். கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மொத்தமாக சேனா நாடுகள் என வகைப்படுத்தப்படுகின்றன. இந்த சேனா நாடுகளில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ் ஏழு முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த நிலையில், அதை தற்போது பும்ரா சமன் செய்துள்ளார். இந்த மைல்கல், சவாலான வெளிநாட்டு சூழ்நிலைகளில் இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக ஜஸ்ப்ரீத் பும்ராவின் செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது.
சேனா நாடுகளில் ஜஸ்ப்ரீத் பும்ராவின் செயல்திறன்
சேனா நாடுகளில் தனது 27 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில், ஜஸ்ப்ரீத் பும்ரா 22.55 சராசரியில் 118 விக்கெட்டுகளை குவித்துள்ளார். தனிப்பட்ட முறையில், அவரது சிறந்த பந்துவீச்சு சிறந்த 6/33 ஆகும். மேலும், டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்தாவது இந்திய கேப்டன் என்ற பெருமையையும் பும்ரா பெற்றார். இதற்கு முன்னர், வினூ மன்கட் ஒரு முறையும், பிக்ஷன் சிங் பேடி எட்டு முறையும், கபில் தேவ் 4 முறையும், அனில் கும்ப்ளே 2 முறையும் கேப்டனாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். கடைசியாக, 2007இல் கும்ப்ளே இந்த சாதனையை படைத்திருந்தார். இதற்கிடையே, பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை 104 ரன்களுக்கு சுருட்டி, முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியா 46 ரன்கள் முன்னிலையுயுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.