இது இரண்டாவது முறை! மிகக்குறைந்த ரன்களை இலக்காக வைத்து வெற்றி பெற்று ஆர்சிபி சாதனை!
லக்னோவில் நடைபெற்ற ஐபிஎல் 2023 தொடரின் 43வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி தொடரின் தனது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் விராட் கோலி மற்றும் பாப் டு பிளெஸ்ஸிஸ் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். கோலி 31 ரன்களும் டு பிளெஸ்ஸிஸ் 44 ரன்களும் எடுத்தனர். இவர்களுக்கு பிறகு களமிறங்கியவர்களில் தினேஷ் கார்த்திக் மட்டும் இரட்டை இலக்கத்தில் 16 ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ரன் எடுத்து வெளியேறிய நிலையில், ஆர்சிபி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது.
108 ரன்களில் சுருண்டது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முதல் இன்னிங்சில் பீல்டிங் செய்தபோது கேப்டன் கே.எல்.ராகுலுக்கு காயம் ஏற்பட்டதால், அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவில்லை. இதனால் அவருக்கு பதிலாக இம்பாக்ட் பிளேயராக வந்த ஆயுஷ் படோனி தொடக்க ஆட்டக்காரராக கைல் மேயர்ஸுடன் களமிறங்கினார். 127 ரன்கள் எனும் மிகக்குறைந்த இலக்குடன் கமிறங்கினாலும், ஆர்சிபியின் அபார பந்துவீச்சால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 19.5ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் ஆர்சிபி ஐபிஎல்லில் எதிரணிக்கு மிகக்குறைந்த இலக்கை வைத்து வென்ற கூட்டு சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்பு 2008 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராகவும் 127 ரன்களை இலக்காக வைத்து ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த காலவரிசையைப் பகிரவும்