அமெரிக்காவின் லீக்ஸ் கோப்பையை வென்ற லியோனால் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி
அமெரிக்காவின் லீக்ஸ் கோப்பை (Leagues Cup) கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. அமெரிக்காவின் இரண்டு 'மேஜர் லீக் சாக்கர்' மற்றும் 'லிகா MX' ஆகிய கால்பந்து தொடர்களில் விளையாடி வரும் அனைத்து அணிகளும் லீக்ஸ் கோப்பையில் இந்த ஆண்டு பங்குபெற்றன. கடந்த ஜூலை 22-ல் தொடங்கிய இந்த லீக்ஸ் கோப்பைத் தொடரில், மொத்தம் 45 அணிகள் 15 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. லீக் போட்டிகளைத் தொடர்ந்து, இன்டர் மியாமி மற்றும் நாஷ்வில்லி ஆகிய இரு அணிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றன. இந்தப் போட்டியில், கடந்தாண்டு ஃபிபா உலகக்கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணியின் கேப்டன் லியோனால் மெஸ்ஸி தலைமை வகித்த இன்டர் மியாமி அணி, தற்போதைய லீக்ஸ் கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறது.
லீக்ஸ் கோப்பை இறுதிப்போட்டி:
நேற்றைய இறுதிப்போட்டியில், 23வது நிமிடத்தில் மெஸ்ஸி ஒரு கோலடிக்க, ஆட்டத்தின் முதல் பாதியில் முன்னிலை வகித்தது இன்டர் மியாமி. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், 57வது நிமிடத்தில் ஃபாஃபா பிக்கல்டின் கோலுடன் போட்டியில் கம்பேக் கொடுத்தது நாஷ்வில்லி. இன்டர் மியாமியின் ஃபார்வர்டு லியோனார்டோ கேம்பனா இறுதி நேரத்தில் தான் முயற்சி செய்த கோலைத் தவறவிட, பெனால்டி ஷூட்அவுட்டுக்குச் சென்றது இறுதிப்போட்டி. டாஸ் வென்ற இன்டர் மியாமி கேப்டன், முதலில் ஷூட் செய்து தனது அணிக்கான முதல் கோலைப் பெற்றுத் தந்தார். இறுதியில் 10-9 என்ற ஷூட்அவுட் கோல் கணக்கில் இறுதிப்போட்டியை வென்றது இன்டர் மியாமி அணி. லியோனால் மெஸ்ஸி மற்றும் இன்டர் மியாமி அணி, இருவருக்குமே இது அத்தொடரின் முதல் கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது.