INDvsSL ஒருநாள் உலகக்கோப்பை: இலங்கைக்கு எதிரான போட்டியில் களமிறங்குவாரா ஹர்திக் பாண்டியா?
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் இந்தியா இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தாலும், அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயத்தால் அவதிப்படுவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான போட்டியின்போது அவர் காயமடைந்தார். இதைத் தொடர்ந்து பாதியிலேயே அவர் மைதானத்தில் இருந்து வெளியேறிய நிலையில், அவர் தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு மாற்றப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சோதனை செய்ததில் அவருக்கு தசைநார் கிழிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக, காயம் பெரிதாக தெரியாததால், அவர் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்குபெறுவார் என பிசிசிஐ நம்பிக் கொண்டிருந்தது. ஆனால், இறுதியில் அவர் விளையாடவில்லை.
இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இடமில்லை
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா இந்த இரு அணிகளை முறையே நவம்பர் 2ஆம் தேதி மும்பையிலும், நவம்பர் 5ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனிலும் எதிர்கொள்ள உள்ளது. ஹர்திக் பாண்டியா பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் இல்லாத இரண்டு போட்டிகளில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி முகமது ஷமி சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும், ஹர்திக்கின் காயத்திற்குப் பிறகு விளையாடும் லெவன் அணியில் இடம்பிடித்த சூர்யகுமார் யாதவும் இந்தியா சிக்கலில் இருந்தபோது இங்கிலாந்துக்கு எதிராக 49 ரன்கள் எடுத்து சிறந்த இன்னிங்ஸை விளையாடினார்.