INDvsNZ 3வது டெஸ்ட்: யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிவேக அரைசதம் சாதனையை முறியடித்தார் ரிஷப் பண்ட்
இந்தியா vs நியூசிலாந்து இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளில் (நவம்பர் 2) ரிஷப் பண்ட் நியூசிலாந்துக்கு எதிராக சாதனை படைத்தார். முன்னதாக நவம்பர் 1 அன்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி முதல் நாளிலேயே 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து ஆட்டத்தைத் தொடங்கிய இந்தியா முதல் நாளில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ரிஷப் பண்டின் அதிரடி ஆட்டம்
இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய உடனேயே களத்தில் பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து, 60 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். எனினும், இந்த அரைசதம் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக அதிவேக அரைசதம் விளாசிய இந்திய கிரிக்கெட் அணி வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக, இதே தொடரின் இரண்டாவது டெஸ்டில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 42 பந்துகளில் அரைசதம் எட்டி இந்த சாதனையை படைத்திருந்த நிலையில், அதை அடுத்த போட்டியிலேய ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார். இதற்கிடையே, ரிஷப் பண்டுடன் இணைந்து, மற்றும் அவர் அவுட்டான பிறகும் சிறப்பாக விளையாடி வந்த ஷுப்மன் கில் 90 ரன்களில் அவுட்டானார்.