INDvsNZ : முகமது ஷமி அபார பந்துவீச்சு; இந்தியாவுக்கு 274 ரன்கள் இலக்கு
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற 274 ரன்களை நியூசிலாந்து இலக்காக நிர்ணயித்துள்ளது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள் டெவோன் கான்வேயை 0 ரன்களிலும், வில் யங்கை 17 ரன்களிலும் வெளியேற்றினர். 9வது ஓவரில் 19 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து தடுமாறிக் கொண்டிருந்த நிலையில், மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராச்சின் ரவீந்திரா மற்றும் டாரில் மிட்செல் அணியின் ஸ்கோரை மீட்டெடுத்தனர்.
ஒருநாள் உலகக்கோப்பையில் முதல் சதத்தை பதிவு செய்த டாரில் மிட்செல்
மூன்றாவது விக்கெட்டுக்கு தொடர்ந்து சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ராச்சின் ரவீந்திரா அரைசதம் அடித்து 75 ரன்களில் வெளியேறினார். எனினும் டாரில் மிட்செல் கடைசி ஓவர் வரை களத்தில் நின்று சதமடித்து 130 ரன்களில் போட்டியின் கடைசிக்கு முந்தைய பந்தில் அவுட்டானார். இது ஒருநாள் உலகக்கோப்பையில் அவருக்கு முதல் சதமாகும். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களே எடுத்த நிலையில், 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.