INDvsIRE முதல் டி20: மழையால் பாதியில் நின்ற ஆட்டம்; டிஎல்எஸ் முறையில் இந்தியா வெற்றி
இந்தியா அயர்லாந்து கிரிக்கெட் அணியுடன் மோதிய முதல் டி20 கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், டக்வொர்த் லூயிஸ் (டிஎல்எஸ்) முறைப்படி இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஜஸ்ப்ரீத் பும்ரா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி இந்தியர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். முதல் 7 ஓவர்கள் முடிவதற்குள் 31 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து அயர்லாந்து தடுமாறினாலும், கர்டிஸ் கேம்பர் மற்றும் பேரி மெக்கார்த்தி பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அரை சதம் விளாசிய பேரி மெக்கார்த்தி
கர்டிஸ் கேம்பர் 39 ரன்களில் அவுட்டானாலும், பேரி மெக்கார்த்தி கடைசி வரை ஆட்டமிழக்காமல் அரைசதம் கடந்து 51 ரன்கள் எடுத்தார். இது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவரது முதல் அரைசதமாகும். மேலும், எட்டாவது இடத்தில் களமிறங்கி இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா, பிரஷித் கிருஷ்ணா மற்றும் ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்தியா, 6.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை பெய்ய தொடங்கியதால் போட்டி செய்யப்பட்டு டிஎல்எஸ் முறையில் 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.