INDvsAUS Final : 20 ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற படுதோல்வி; பழிதீர்க்குமா இந்திய அணி?
2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் கோப்பையை வெல்வதற்கான பலப்பரீட்சையில் ஈடுபட உள்ளன. இரு அணிகளும் இதற்கு முன்னர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 2003 சீசனில் மட்டுமே நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், அதில் ஆஸ்திரேலியா இந்தியாவை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி படுதோல்வி அடைய வைத்தது. இந்நிலையில், நடப்பு உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலும், அதையே மீண்டும் நிகழ்த்திக்காட்டும் நோக்கத்துடன் ஆஸ்திரேலியா தயாராகி வரும் நிலையில், 20 ஆண்டுகளுக்கு முந்தைய படுதோல்விக்கு பழிதீர்க்க இந்திய அணியும் துடித்துக் கொண்டுள்ளது. இந்நிலையில், 2003இல் என்ன நடந்தது என்பதை இதில் விரிவாக பார்க்கலாம்.
2003 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி
சவுரவ் கங்குலி தலைமையில் 2003 ஒருநாள் உலகக்கோப்பையை எதிர்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி லீக் சுற்றுகளில் ஆஸ்திரேலியாவுடனான போட்டி தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவுடனான லீக் போட்டியில் இந்தியா 125 ரன்களுக்கு சுருண்ட நிலையில், 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா எளிதாக வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், இறுதிப்போட்டியில் மீண்டும் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்திய அணி 360 ரன்கள் எனும் கடினமான இலக்கை எதிர்கொண்டு 234 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணியில் வீரேந்திர சேவாக் மட்டும் அதிகபட்சமாக 82 ரன்கள் எடுத்திருந்தார். 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இதில் தோற்றதே ரன்கள் அடிப்படையில் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஒரு அணியின் மிகப்பெரிய தோல்வியாக தற்போதுவரை உள்ளது குறிப்பிடத்தக்கது.