INDvsAUS Final : ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்த விராட் கோலி
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் இரண்டாவது அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி படைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டியில் களமிறங்கும் முன் இந்த சாதனையை எட்ட அவருக்கு மூன்று ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. இந்நிலையில், தற்போது ரிக்கி பாண்டிங்கை பின்னுக்குத் தள்ளி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். முன்னதாக, ரிக்கி பாண்டிங் 1,743 ரன்களை எடுத்திருந்த நிலையில், அதை முறியடித்துள்ளார். தற்போது சச்சின் டெண்டுல்கர் மட்டுமே விராட் கோலியை விட முன்னிலையில் 2,278 ரன்களுடன் உள்ளார்.
அதிக 50+ ஸ்கோர்கள்
ஒருநாள் உலகக்கோப்பையில் அதிக முறை 50+ ரன்கள் குவித்த வீரர்களிலும் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக விராட் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த போட்டியில் 54 ரன்கள் எடுத்ததன் மூலம் 17வது முறையாக 50க்கும் மேல் ரன் ரன் எடுத்துள்ளார். இதில் ஐந்து சதங்கள் மற்றும் 12 அரைசதங்கள் அடங்கும். இந்த பட்டியலில் தற்போது சச்சின் டெண்டுல்கர் மட்டுமே 21 முறை 50+ ஸ்கோர்களுடன் முதலிடத்தில் உள்ளார். மேலும், தொடர்ந்து ஐந்தாவது முறையாக 50 ரன்களை எட்டியுள்ளார். விராட் கோலி ஒரு உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து 5 முறை அரைசதம் எட்டுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் 2019 உலகக்கோப்பை தொடரிலும் இதேபோல் ஐந்துமுறை தொடர்ச்சியாக 50 ரன்களை எட்டி இருந்தார்.