INDvsAFG : ஜஸ்ப்ரீத் பும்ரா அபார பந்துவீச்சு; இந்தியாவுக்கு 273 ரன்கள் இலக்கு
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் புதன்கிழமை (அக்டோபர் 11) நடைபெற்ற போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 273 ரன்களை ஆப்கான் கிரிக்கெட் அணி நிர்ணயித்துள்ளது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் மிகப்பெரிய அளவில் ரன்குவிக்க முடியவில்லை என்றாலும், நிலைத்து நின்று வலுவான அடித்தளம் அமைத்தனர். அதைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஹஷ்மத்துல்லா ஷாஹிதி மற்றும் அஸ்மத்துல்லா உமர்சாய் நிலைத்து நின்று அணியின் ஸ்கோரை மளமளவெனஉயர்த்தினர். மேலும், இருவரும் அரைசதம் கடந்து முறையே ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 80 ரன்களும், அஸ்மத்துல்லா உமர்சாய் 62 ரன்களும் எடுத்தனர்.
ஜஸ்ப்ரீத் பும்ரா அபார பந்துவீச்சு
ஹஷ்மத்துல்லா ஷாஹிதி மற்றும் அஸ்மத்துல்லா உமர்சாய் அவுட்டாகி வெளியேறிய நிலையில், அதன் பின்னர் வந்த முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரான் மற்றும் ரஷீத் கானை இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அடுத்தடுத்து வெளியேற்றினார். இதனால் ஆப்கானிஸ்தான் அணியின் ரன் வேட்டை கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களை எடுத்தது. இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜஸ்ப்ரீத் பும்ரா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.