ஆசிய விளையாட்டுப் போட்டியில் கம்போடியாவை வீழ்த்தியது இந்திய வாலிபால் அணி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 19) நடந்த வாலிபால் முதல் நிலை ஆட்டத்தில் இந்திய அணி கம்போடியாவை வீழ்த்தியது. தொடக்கத்தில் இரு அணிகளும் சரிசமமாக போராடிய நிலையில், பின்னர் படிப்படியாக இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். போட்டியின் முதல் செட்டை இந்திய அணி 25-14 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய இந்தியா, இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றுகளில் முறையே 25-13, 25-19 என பெற்று வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இதையடுத்து புதன்கிழமை தனது இரண்டாவது போட்டியில் இந்திய வாலிபால் அணி தென்கொரியாவை எதிர்கொள்ள உள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வாலிபால் அணியின் முந்தைய செயல்திறன்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வாலிபாலில் இந்தியா பல ஏற்றத்தாழ்வுகளை கண்டுள்ளது. 1958ஆம் ஆண்டில் இந்திய ஆடவர் வாலிபால் அணி முதல் முறையாக வெண்கல பதக்கம் வென்று வரலாறு படைத்தது. இந்த சாதனையை தொடர்ந்து 1962இல் இறுதிப்போட்டியில் ஜப்பானிடம் தோல்வியைத் தழுவி வெள்ளி வென்றது. இருப்பினும், அதன் பின்னர் தொடர்ந்து தடுமாறி வந்த இந்தியா 1986இல் ஒரு வெண்கலம் வென்ற நிலையில், அதன் பின்னர் 37 ஆண்டுகளாக பதக்கம் பெற போராடி வருகிறது. மறுபுறம், மகளிர் அணி, இன்றுவரை நான்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ளது. இந்நிலையில், பிரீமியர் வாலிபால் லீக் போட்டியால் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் வாலிபால் முன்னேற்றம் கண்டு வரும் நிலையில், பதக்கம் வெல்லும் முனைப்புடன் உள்ளது.