ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பாய்மர படகு அணி வெற்றியுடன் தொடக்கம்
சீனாவில் புதன்கிழமை (செப்டம்பர் 20) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் பாய்மர படகுப் போட்டியில் இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை அமைத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. லைட்வெயிட் ஆடவர் டபுள் ஸ்கல்ஸ் போட்டியில் அர்ஜூன் லால் ஜாட் மற்றும் அரவிந்த் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தகுதிச்சுற்றில் 6:27:45 நேரத்தில் இலக்கை எட்டி இரண்டாவது இடத்தை பிடித்தனர். இதேபோல் சத்னம் சிங் மற்றும் பர்மிந்தர் சிங் ஆகியோர் 6:27:01 என்ற நேரத்துடன் இலக்கை எட்டி தங்கள் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்தனர். இரண்டு அணிகளும் இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்காக தகுதிச் சுற்றில் அடுத்து விளையாட உள்ளனர்.
மகளிர் படகு அணியும் தகுதிச்சுற்றுக்கு தகுதி
ஆடவர் பிரிவைப் போலவே, மகளிர் லைட்வெயிட் ஸ்கல்ஸ் பிரிவில் இந்திய ஜோடியான கிரண் மற்றும் அன்ஷிகா பார்தி ஜோடி 7:27:57 என்ற நேரத்தில் இலக்கை எட்டினர். இதன் மூலம் அவர்கள் அடுத்ததாக இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் போட்டியிட உள்ளார்கள். இதற்கிடையே, ஆடவர் இரட்டையர் காக்ஸ்லெஸ் போட்டியில் இந்தியாவின் பாபு லால் யாதவ் மற்றும் லேக் ராம் ஜோடி 6:42:59 நேரத்தில் பந்தய தூரத்தை எட்டினர். 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 14 பாய்மர படகுப் போட்டிகள் நடக்கும் நிலையில், அதில் 12 பிரிவுகளில் இந்திய அணி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.