Asian Games 2023: தற்போது வரையிலான இந்திய அணியின் வெற்றி தோல்வி நிலவரம்
2023ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடரானது சீனாவில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று தொடக்க விழா நடைபெற்ற நிலையில், இன்று முதல் போட்டிகள் நடைபெறத் துவங்கியிருக்கின்றன. முதல் நாளிலேயே பதக்க வேட்டையைத் துவக்கிய இந்தியா தற்போது வரை மூன்று வெற்றி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கிறது. இந்திய ஹாக்கி அணி, டென்னிஸ் வீரர் சுமித் நாகல் மற்றும் குத்துச்சண்டை வீராங்கணை பிரீத்தி ஆகியோர் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறியிருக்கின்றனர். டேபிள் டென்னிஸ் விளையாட்டில், ஆடவர் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கும் நிலையில், பெண்கள் அணி தோல்வியைத் தழுவி போட்டியில் இருந்து வெளியேறியிருக்கிறது.
ஹாக்கி: உஸ்பெகிஸ்தான் அணியை தோற்கடித்த இந்தியா
இந்திய ஆடவர் ஹாக்கி அணியானது இன்று தங்களது முதல் குழு சுற்றுப் போட்டியில் உஸ்பெகிஸ்தானை எதிர்கொண்டது. உஸ்பெகிஸ்தான் அணியின் மீது முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தி, 16-0 என்ற கணக்கில் போட்டியை வென்றிருக்கிறது இந்திய ஹாக்கி அணி. முதல் 45 நிமிடங்களில் 7 கோல்களை மட்டுமே அடித்திருந்த இந்திய அணி, இறுதி 15 நிமிடங்களில் மட்டும் 9 கோல்கள் அடித்து அசத்தியது. கடைசி 15 நிமிடங்களில் பெனால்டி கார்னர் மூலமாக நான்கு கோல்களும், ஸ்பாட் மூலம் ஒரு கோலும், ஃபீல்டு பிளே மூலம் நான்கு கோல்களையும் அடித்திருக்கின்றனர் இந்திய அணி வீரர்கள். இந்த வெற்றியைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 26ம் தேதியன்று, குழு சுற்றுப் போட்டியில் சிங்கப்பூரை எதிர்கொள்கிறது இந்தியா.
டென்னிஸ்: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சுமித் நாகல்
டென்னிஸ் விளையாட்டில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் மகாவைச் சேர்ந்த ஹோ டின் மார்கோவை எதிர்கொண்டார் இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல். இந்தப் போட்டியில் தன்னை எதிர்கொண்ட வீரர் 6-0, 6-0 என்ற நேர்செட் கணக்கில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் சுமித் நாகல். குத்துச்சண்டை: காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் ப்ரீத்தி இந்தியாவின் சார்பில் குத்துச்சண்டையின் 50-54 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட குத்துச்சண்டை வீராங்கணை ப்ரீத்தி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜோர்டனைச் சேர்ந்த அல்காசனாத் சிலினாவை வெற்றி கொண்டிருக்கிறார். இரண்டாவது சுற்று முடிவிலேயே நடுவர் போட்டியை நிறுத்தி ப்ரீத்தியை வெற்றியாளராக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து 50-54 கிலோ எடைப்பிரிவில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் அவர்.
டேபிள் டென்னிஸ்:
டேபிள் டென்னிஸ் விளையாட்டில் அணிகள் பிரிவில் இந்திய டேபிள் டென்னிஸ் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் ரவுண்டு ஆஃப் 16 சுற்றில் போட்டியிட்டன. ஆடவர் அணியானது, தங்களை எதிர்த்துப் போட்டியிட்ட கஜகஸ்தான் அணியை 3-2 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி கொண்டு காலிறுதி சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது. ஆனால், மகளிர் அணியானது தங்களை எதிர்த்துப் போட்டியிட்ட தாய்லாந்து அணியிடம் 2-3 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியைத் தழுவி போட்டியில் இருந்து வெளியேறி அதிர்ச்சியளித்திருக்கிறது. ஆடவர் அணியானது இந்தப் போட்டியின் வெற்றியைத் தொடர்ந்து, இன்று மாடலை நடைபெறவிருக்கும் காலிறுதி போட்டியில் தென் கொரிய அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.