ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: காலிறுதிச் சுற்றில் நேபாளத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங் தேர்வு
சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட்டில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியது இந்திய அணி. அதனைத் தொடர்ந்து, இன்று தங்களுடைய முதல் போட்டியில் விளையாடுகிறது இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி. இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக ருதுராஜ் கெயிக்வாட் தலைமையிலான இளம் இந்தியப் படையை அனுப்பியிருக்கிறது பிசிசிஐ. தரவரிசைப் பட்டியலில் முன்னணியில் இருக்கும் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் நேரடியாக காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன. மற்ற ஒன்பது அணிகளும் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு நேற்று வரை குழுச்சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த குழுக்ககளில் முதலிடத்தைப் பிடித்த ஹாங் காங், மலேசியா மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் தற்போடு காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன.
இந்தியா Vs நேபாளம்:
குழுச்சுற்றுப் போட்டிகளைத் தொடர்ந்து இன்று முதல் காலிறுதிச் சுற்றுப் போட்டி தொடங்கியது. முதல் போட்டியில் தற்போது இந்தியா மற்றும் நேபாள அணிகள் பலப்பரீட்சை செய்து வருகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். இந்தியா சார்பில் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் யசஷ்வி ஜெயிஸ்வால் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். 25 ரன்களை மட்டுமே குவித்து ருதுராஜ் கெயிக்வாட் ஆட்டமிழந்த நிலையில், அதனைத் தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா மற்றும் ஜிதேஷ் ஷர்மா ஆகிய வீரர்களும் 2 மற்றும் 5 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
சதமடித்த ஜெயஸ்வால்:
இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யசஷ்வி ஜெய்ஸ்வால் மட்டும் நிலைத்து நின்று ஆடி 204 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 100 ரன்களைக் குவித்து அசத்தியிருக்கிறார். நேபாள அணி சார்பில் தீபேந்தர் சிங் அயிரி 2 விக்கெட்டுகளையும், சேம்பால் காமி மற்றும் சந்தீப் லாமிச்சேர் ஆகிய வீரர்கள் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். யசஷ்வி ஜெயிஸ்வாலைத் தவிர்த்து பிற இந்திய பேட்டர்கள் பெரிய அளவில் ரன் குவிப்பில் ஈடுபடாத நிலையில், 20வது ஓவரில் மட்டும் 23 ரன்களைக் குவித்தார் அசத்தினார் ரிங்கு சிங். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்களைக் குவித்திருக்கிறது இந்தியா. நேபாள அணிக்கு 203 ரன்கள் இலக்கு.