மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் ரிஷப் பந்த்!
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் மீண்டும் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 10) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு படங்களைப் பகிர்ந்து, இதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த படங்களில் அவர் ஊன்றுகோலின் உதவியுடன் நடப்பதைக் காணலாம். முன்னதாக, 2022 டிசம்பரில் பந்த் உத்தரகாண்டில் ஒரு மோசமான கார் விபத்தில் சிக்கினார். அதன்பிறகு படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் வீடு திரும்பி இருந்தாலும், இந்திய அணியில் அவர் மீண்டும் இடம் பெற பல மாதங்கள் ஆகலாம் என கிரிக்கெட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
ரிஷப் பந்த் இல்லாமல் தவிக்கும் இந்திய அணி
தோனி ஓய்வு பெற்ற பிறகு, ரிஷப் பந்த் கடந்த சில ஆண்டுகளாக அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் இந்தியாவின் விக்கெட் கீப்பருக்கு முதல் தேர்வாக இருந்து வருகிறார். பேட்டிங்கில் மிடில் ஆர்டரில் களமிறங்கி, எதிராணியினரின் பந்துவீச்சை அடித்து நொறுக்கும் ஆற்றல் கொண்ட பந்த் எதிராணிகளுக்கு மிகவும் கடினமான வீரர்களில் ஒருவராக உள்ளார். இந்நிலையில், அடுத்த 18 மாதங்களில் ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, ஆசிய கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல முக்கியமான கிரிக்கெட் நிகழ்வுகள் வரிசையாக நடைபெறும் நிலையில் பந்த் இல்லாதது அணிக்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. எனவே, இந்திய அணி நிர்வாகமும் ரசிகர்களும் பந்த் விரைவில் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள்.