இந்தியா vs தென்னாப்பிரிக்கா 3வது ODI : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வியாழக்கிழமை (டிசம்பர் 21) நடைபெற உள்ளது. முன்னதாக, மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா 1-1 என சமன் செய்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், இதற்கு முன்னர் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மறுபுறம், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பழிதீர்த்தது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் இருக்கும் சூழலில், தொடரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டியில் இரு அணிகளும் மோத உள்ளன.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி நேருக்கு நேர் மோதல் புள்ளிவிபரம்
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 93 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், தென்னாப்பிரிக்கா அணி அதிகபட்சமாக 51 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி 39 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகள் முடிவில்லாமல் முடிந்துள்ளன. தென்னாப்பிரிக்காவில் இரு அணிகளும் 39 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், தென்னாப்பிரிக்கா 26 போட்டிகளிலும், இந்தியா 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு போட்டிகள் முடிவில்லாமல் முடிந்துள்ளன. இரு அணிகளும் தென்னாப்பிரிக்காவில் 6 தொடர்களில் மோதியுள்ள நிலையில், ஒரே ஒரு முறை மட்டுமே விராட் கோலி தலைமையில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன்
இந்திய கிரிக்கெட் அணி (எதிர்பார்க்கப்படும் விளையாடும் XI) : ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (கேப்டன்), ரிங்கு சிங், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், குல்தீப் யாதவ், மற்றும் முகேஷ் குமார். தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி (எதிர்பார்க்கப்படும் விளையாடும் XI) : டோனி டி ஸோர்ஸி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடென் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், வியான் முல்டர், கேசவ் மகராஜ், நந்த்ரே பர்கர், லிசாட் வில்லியம்ஸ் மற்றும் பியூரன் ஹென்ட்ரிக்ஸ்.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா பிட்ச் மற்றும் வானிலை அறிக்கை
பார்லில் உள்ள போலண்ட் பார்க் மைதானத்தின் மேற்பரப்பு பொதுவாக பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும். இங்கு சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 234 ஆகும். எனினும், புதிய பந்து பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதாலும், போட்டி பகலிரவு ஆட்டமாக நடப்பதாலும், டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச முடிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை அறிக்கையைப் பொறுத்தவரை போட்டி தொடங்கும்போது 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் மிகவும் வெப்பமான நாளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பார்லில் டிசம்பர் 21 அன்று மழை பெய்யும் வாய்ப்பு பூஜ்ஜியமாகும்.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா போட்டி விபரங்கள்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பார்லில் உள்ள போலந்து பார்க் மைதானத்தில் வியாழக்கிழமை (டிசம்பர் 21) நடைபெற உள்ளது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி பகல் இரவு ஆட்டமாக அங்கு நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 4.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைகாட்சி சேனல்களிலும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் நேரலையில் கண்டு களிக்கலாம்.