ஆசிய கோப்பை 2023 : இந்தியா vs பாகிஸ்தான் போட்டிக்கு மழையால் ஆபத்து
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை 2023 லீக் போட்டி சனிக்கிழமை (செப்டம்பர் 2) இலங்கையின் கண்டியில் நடைபெற உள்ளது. எனினும், பலகொல்ல புயல் கண்டியை கடக்கவுள்ளதால் போட்டியின்போது மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை போன்ற போட்டிகளில் மட்டுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதி வருவதால், இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மோதலை பார்க்க ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவருமே ஆர்வமாக உள்ள நிலையில், மழை அச்சுறுத்தல் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் எவ்வளவு?
பாகிஸ்தானுடன் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டியின்போது கண்டியில் மழை பெய்ய 70% வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இங்கிலாந்தை தளமாகக் கொண்ட வானிலை அலுவலகத்தின் கூற்றுப்படி, கண்டியில் இந்தியா vs பாகிஸ்தான் மோதல் நாளன்று இந்திய நேரப்படி 2:30 மணிக்கு (போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்) மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாலை 5:30 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு 60% ஆக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, இலங்கையில் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பல மாகாணங்களில் மழை பெய்யும் என்று இலங்கை அந்நாட்டு வானிலை ஆய்வு மையமும் கணித்துள்ளது.