மோதலுக்கு தயாராகும் IND vs PAK : இருதரப்பிலும் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் டாப் 5 வீரர்கள்
தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2023 தொடரில் சனிக்கிழமை (செப்டம்பர் 2) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோத தயாராகி வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் கடந்த பல ஆண்டுகளாக, ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை போன்ற பல நாடுகள் பங்கேற்கும் சர்வதேச நிகழ்வுகளில் மட்டுமே போட்டியிடுவதால், இதில் எப்போதுமே சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது. குறிப்பாக சில இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள பாகிஸ்தான் வீரர்கள் திணறுவதும், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை இந்திய வீரர்கள் எதிர்கொள்ள திணறுவதும் நடந்து வந்துள்ளது. அந்த வகையில், போட்டிக்கு முன்னதாக, இருதரப்பிலும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படும் ஐந்து வீரர்களின் மேட்ச்-அப்களை இதில் பார்க்கலாம்.
ரோஹித் சர்மா vs ஷாஹீன் அப்ரிடி
சமீப காலங்களில், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக செயல்படுவதில் தடுமாறி வருகிறார்கள். இதற்கு ரோஹித் ஷர்மாவும் விதிவிலக்கல்ல. முன்னதாக, கடந்த ஆண்டு டி20 கிரிக்கெட் வடிவில் நடந்த ஆசிய கோப்பையின் போதும், ஷாஹீன் அப்ரிடி ஒரு அற்புதமான இன்ஸ்விங்கர் மூலம் அவரை வீழ்த்தினார். இருப்பினும், ஷாஹீன் அப்ரிடி இன்னும் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மாவை அவுட்டாக்கவில்லை. டி20 கிரிக்கெட்டை போல் 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் இருக்காது என்பதால், ஷாஹீன் அப்ரிடியை ரோஹித் சமாளிப்பாரா அல்லது சறுக்குவாரா என்பதை பார்க்க பலரும் ஆர்வமாக உள்ளனர்.
ஷுப்மன் கில் vs நசீம் ஷா
ஷுப்மான் கில் மற்றும் நசீம் ஷாவைப் பொறுத்தவரை, முறையே இந்தியா மற்றும் பாகிஸ்தானின் எதிர்கால சூப்பர் ஸ்டார் வீரர்களாக கருதப்படுபவர்கள். இருவரும் சிறப்பாக செயல்பட்டு தங்கள் அணிக்கு வெற்றியை பெற்றுத் தருவதற்கு கடுமையாக முயற்சி செய்வர். முன்னதாக, கடந்த ஆண்டு ஆசிய கோப்பை மற்றும் டி 20 உலகக்கோப்பையின் போது இந்திய தொடக்க வீரர்கள் நசீமை எதிர்கொள்ள சற்று சிரமப்பட்டனர். இதனால் சனிக்கிழமை நடக்கும் போட்டியில் ஷுப்மான் கில் அவரை எவ்வாறு சமாளித்தார் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். இருவரும் இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் ஒருவரையொருவர் எதிர்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாபர் அசாம் vs குல்தீப் யாதவ்
சனிக்கிழமையன்று ஜஸ்ப்ரீத் பும்ரா பங்கேற்பது குறித்து இன்னும் நிச்சயமற்றதன்மை நிலவுவதால், பாகிஸ்தான் கேப்டன் மற்றும் ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் பாபர் அசாமின் பேட்டிங் திட்டத்தை தவிடுபொடியாக்கும் பொறுப்பு குல்தீப் யாதவ் மீது இருக்கும். பாபர் அசாம் இதுவரை ஐந்து ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக 31.60 என்ற சராசரியில் 158 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், தற்போதைய ஆசியக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் நேபாளத்திற்கு எதிராக 131 பந்துகளில் 151 ரன்கள் எடுத்து சிறந்த ஃபார்மில் உள்ளார். இருப்பினும், 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பையின் போது பாபரை குல்தீப் அவுட்டாக்கியதால், அதேபோல் மீண்டும் செய்வார் என நம்பலாம்.
விராட் கோலி vs ஹரிஸ் ரவுஃப்
கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை ஹரிஸ் ரவுஃப் வீழ்த்திய பிறகு, ஒற்றை ஆளாய் போராடி இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். மெல்போர்னில் நடந்த அந்த ஆட்டத்தில் ஹரிஸ் ரவுஃப்பை எதிர்கொள்ள இந்திய வீரர்கள் திணறிய நிலையில், விராட் கோலி அவரை எளிதாக கையாண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியதை யாராலும் மறந்திருக்க முடியாது. விராட் கோலியிடம் பெற்ற அடியை ஹரிஸ் ரவுஃப்பும் மறந்திருக்க மாட்டார் என்பதால், இந்த முறை விராட் கோலியை வீழ்த்தும் திட்டத்துடன் நிச்சயம் வருவார் என்பதால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கலாம்.
ஹர்திக் பாண்டியா vs ஷதாப் கான்
பேட்டர்கள் vs பந்துவீச்சாளர்கள் என்பதைப் போல, ஹர்திக் பாண்டியா மற்றும் ஷதாப் கான் ஆகிய இரண்டு உலகத் தரம் வாய்ந்த ஆல்ரவுண்டர்களுக்கு இடையிலான மோதலும் இந்த போட்டியில் அதிக கவனம் பெற்றுள்ளது. ஷதாப் பாபரின் அணியில் பந்துவீச்சாளர்களில் ஒருவராகவே அதிகம் இருந்துள்ளார். மேலும், நேபாளத்துக்கு எதிரான கடைசி போட்டியில் ஷதாப் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கிலும் தொடர்ந்து சிறப்பாகவே செயல்பட்டு வந்துள்ளார். மறுபுறம், ஹர்திக் பாண்டியா, ஒரு பவர்-ஹிட்டரை விட அதிக வலிமையான பேட்டர். கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கோலியுடன் அவரது பார்ட்னர்ஷிப் இந்தியாவுக்கு முக்கியமானதாக இருந்தது. இருப்பினும், இந்தியாவின் வேகப்பந்துவீச்சு முழு திறனுடன் இல்லை எனக் கூறப்படுவதால் பந்துவீச்சில் அவரது பங்களிப்பு முக்கியமாக இருக்கும்.