பாஜக தலைவர்களுடன் ஒன்றாக கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த காங்கிரஸ் முதல்வர்
அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும், அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22) தரம்சாலா மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் ஒன்றாக ரசித்துள்ளனர். பாஜக தலைவரும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சருமான அனுராக் தாக்கூர், காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான சுக்விந்தர் சிங் சுகு, மாநிலத் தொழில்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்கூர் உள்ளிட்டோர் ஒன்றாக அமர்ந்து போட்டியை பார்த்தனர். இமாச்சலப் பிரதேச பாஜக தலைவர் டாக்டர் ராஜீவ் பிண்டல் மற்றும் பல காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் மைதானத்தில் இருந்து போட்டியை நேரலையில் பார்த்தனர்.
பாஜக தலைவர்களுக்கு இடையில் அமர்ந்த காங்கிரஸ் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு
காங்கிரஸ் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கும் இடையில் அமர்ந்து காணப்பட்டார். விவிஐபி ஸ்டாண்டில் முதல்வர் சுகு அனுராக் தாக்கூரின் கையைப் பிடித்தபடி தலைவர்கள் ஒன்றாக அமர்ந்திருந்தனர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தலைவர் அருண் துமால் மற்றும் இமாச்சல பிரதேச மாநில சுற்றுலா கழக தலைவர் ரகுபீர் சிங் பாலி ஆகியோரும் அங்கு இருந்தனர். "இந்த நிகழ்வு நமது தேசத்தின் விளையாட்டின் ஆர்வத்திற்கு ஒரு சான்றாகும் என்று முதலமைச்சர் போட்டிக்கு பிறகு கூறினார். இதற்கிடையே, போட்டியை பொறுத்தவரை இந்தியா நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.