Loading...
நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஹாக்கி போட்டி: கடைசி நேரத்தில் கோல் அடித்து ஆட்டத்தை டிரா செய்த இந்தியா
நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஹாக்கி போட்டி 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஹாக்கி போட்டி: கடைசி நேரத்தில் கோல் அடித்து ஆட்டத்தை டிரா செய்த இந்தியா

எழுதியவர் Vasuki
Nov 21, 2026
05:43 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா - நியூசிலாந்து நாடுகளுக்கு இடையிலான 100 ஆண்டுகால விளையாட்டு உறவைக் கொண்டாடும் வகையில் நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஹாக்கித் தொடரின் இரண்டாவது போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் பரபரப்பான டிராவில் முடிவடைந்துள்ளது. ஆக்லாந்தில் உள்ள லாயிட் எல்ஸ்மோர் ஹாக்கி மைதானத்தில் சனிக்கிழமையான இன்று (நவம்பர் 21) நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தொடக்கம் முதலே இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின. போட்டியின் 25-வது நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் டிலான் தாமஸ் கோல் அடித்து தனது அணிக்கு 1-0 என்ற முன்னிலையைப் பெற்றுத் தந்த நிலையில், அதற்குப் பதிலடியாக இந்திய வீரர் அங்கத் பிர் சிங் 35-வது நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 எனச் சமநிலைக்குக் கொண்டு வந்தார்.

57-வது நிமிடத்தில் கோல்

கேப்டன் சஞ்சய் அடித்த கோலால் தப்பிய இந்தியா

விறுவிறுப்பாக நகர்ந்த ஆட்டத்தின் 56-வது நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் சாம் ஹிஹா கோல் அடித்து மீண்டும் தனது அணியை 2-1 என முன்னிலைப்படுத்தினார்.

ஆட்டம் முடியச் சில நிமிடங்களே இருந்ததால் இந்திய அணிக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இருப்பினும், கடைசி நொடி வரை நம்பிக்கையுடன் போராடிய இந்திய அணிக்கு 57-வது நிமிடத்தில் முக்கியமான பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பைத் துல்லியமாகப் பயன்படுத்திய இந்திய கேப்டன் சஞ்சய், பந்தை கோல் வலைக்குள் திணித்து ஆட்டத்தை 2-2 எனச் சமன் செய்தார். இறுதிவரை மேற்கொண்டு கோல்கள் விழாததால் போட்டி டிராவில் முடிந்தது.

நாளை கடைசி போட்டி

தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

முன்னதாக நவம்பர் 19-ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியிருந்தது.

தற்போது இரண்டாவது போட்டியும் டிராவில் முடிந்துள்ளதால், 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகளும் மோதும் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி நாளை (நவம்பர் 22) நடைபெறவுள்ளது.

சொந்த மண்ணில் தொடரைச் சமன் செய்ய நியூசிலாந்தும், வெற்றி பெற்றுத் தொடரைக் கைப்பற்ற இந்திய அணியும் மோதவுள்ளதால் நாளைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது.

ADVERTISEMENT