இந்தியா vs ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி : வெற்றி வாய்ப்பு யாருக்கு?
நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரை இந்தியா வென்ற நிலையில், வெள்ளிக்கிழமை (மார்ச் 17) முதல் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கான பயிற்சியாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா இல்லாத நிலையில், ஹர்திக் பாண்டியா இந்திய அணியை வழிநடத்த உள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்பட உள்ளார். வெள்ளிக்கிழமை முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. போட்டியானது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் (பிற்பகல் 1:30 மணி) நேரடியாக ஒளிபரப்பப்படும் மற்றும் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
ஒருநாள் போட்டிகளில் இந்தியா vs ஆஸ்திரேலியா புள்ளி விபரங்கள்
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இதுவரை 143 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 80 போட்டிகளிலும், இந்தியா 53 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 10 போட்டிகளில் எந்த முடிவும் இல்லை. சொந்த மண்ணில், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 29 வெற்றிகளையும் 30 தோல்விகளையும் பெற்றுள்ளது. 2019இல் 3-2 என தொடரை கைப்பற்றியதன் மூலம், இந்தியாவில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற கடைசி அணியாக ஆஸ்திரேலியா உள்ளது. இதற்கிடையே, காயத்தால் அவதிப்படும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.